கல்லாத்தி புத்தர்!

பண்ருட்டி – திருவதிகை – வீராட்டனேஸ்வரர் கோயிலில் இருக்கும் புத்தர் சிலை தொடர்பாக வெளிவரவிருக்கும் நண்பர் அருள் முத்துக்குமரனின் ஆய்வுக்கட்டுரைக்காக காத்திருக்கிறேன். எனவே, இச்சிலையைப் பற்றிய வரலாற்றை விரிவாக ஆராயமல் சுருக்கமாக கூறுகிறேன்.

156 செ.மீ. உயரமும் 80 செ.மீ. அகலமும் கொண்டுள்ளது இப்புத்தர்சிலை. தமிழகத்தில் இருக்கும் புத்தர் சிலைகளுள் மிகவும் குதிப்பிடத்தகுந்தது திருவதிகை புத்தர்சிலை.

தியான நிலையில் உள்ள புத்தர் சிலைகளின் உள்ளங்கையில் அசோக சக்கரம் வழக்கமாக காணப்படும். திருவதிகை புத்தர் சிலையின் உள்ளங்கையில் அசோக சக்கரம் காணப்படுவதோடு மட்டும் இல்லாமல் அரச இலையும் காணப்படுகிறது.

புத்தர் அரச மரத்தடியில் ஞானமடைந்தார் என்பதனால் அரசமரத்துக்குப் போதிமரம் என்ற சிறப்புப்பெயர் உண்டு. போதிமரம் என்பது மட்டும் இல்லாமல் அரசமரம் என்பதுவும் சிறப்புப் பெயரே ஆகும் என்பதை பண்டிதர் அயோத்திதாசரின் எழுத்துக்களின் வழி நாம் அறியலாம்.

அரசமரத்திற்குத் தமிழ்மொழியில் கல்லாத்தி மரம் என்று பெயர். ஔவையார் எழுதிய ஆத்திசூடிக்கு விளக்கம் தரும் பண்டிதர் அயோத்திதாசர் ஆத்தி என்பது அரசமரத்தைக் குறிக்கும், இதன் அடிப்படையில் ஆத்திசூடி என்பது ஆத்திப்பூவை சூடிய புத்தரைக் குறிக்கும் என்று விளக்கம் தருகிறார். எனவே, கல்லாத்தி மரத்தின் அடியில் அரசன் புத்தர் அமர்ந்து ஞானம் பெற்றதால் இம்மரம் அரசமரம் என்று பெயர் பெற்றுள்ளது என்பதை நாம் இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

தமிழ்ச்சமூகத்தில் புத்தரின் போதிமரம் ஆத்தி (கல்லாத்தி – ஆத்திசூடி) என்று சிறப்பாக வழங்கப்பட்டதை பௌத்த பிக்குணி ஔவையின் வழி அறியலாம். திருவதிகை புத்தர் சிலையின் கையில் அரச இலை சிறப்பாக உள்ளதால் இச்சிலையைக் ‘கல்லாத்தி புத்தர்’ என்று சிறப்பாக அழைக்க வேண்டும் என்று மனசுக்குள் தோன்றியது.

நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நண்பரின் கட்டுரை வெளிவந்த பிறகு திருவதிகை புத்தரையும் கேரளாவில் கோட்டயத்திற்கு அருகில் உள்ள நிலம்பேரூர், கிளிரூர் ஆகிய இடங்களில் உள்ள புத்தர்சிலைகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்தால் திருவதிகை கல்லாத்தி புத்தரின் வரலாற்றைப் புரிந்துகொள்ளலாம் என்று எண்ணுகிறேன் (இதை பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறேன்).

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started